இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை




                 இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை

 அது ஒரு கார்காலம், பொழுது விடிந்தும் விடியாத காலை நேரம் அது, உப்பு காற்றுடன் கலந்த பனி காற்று சிறகுகள் கொண்ட பறவைகளையும் நடுங்க செய்தது.  அது ஒரு துறைமுக நகரம். உள்நாட்டு சிறிய கப்பல்கள், வெளிநாட்டு பயணிகள் கப்பல் மற்றும் வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் என வெவ்வேறு வகையிலும், வண்ணங்களிலும், நங்கூரம் பாய்ச்சி கட்டுத்தறியில் நிற்கும் வெவ்வேறு அளவு எருமைகளை போன்று  வரிசையாக அசைந்து அசைந்து நின்றன.

துறைமுகம் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தாலும், இது இரவா இல்லை பகலா? என யாரும் நினைக்கும்  வகையில் மின் விளக்கு வெளிச்சம் ஏகமாய் தெரிந்தது. துறைமுக வாசலில் சமீபத்தில் நூற்றாண்டு கண்ட பழமையான ஆலமரம் ஒன்று  ஏகமாய் தெரியும் வெளிச்சத்திற்கு பெரிய நிழல் பரப்பி நின்றது. ஏறக்குறைய ஒரு 50 வகையான (எண்ணிக்கையில் 1000-தை தாண்டும்)   பறவைகளுக்கு உண்ண உணவும், இருக்க இருப்பிடமும் தந்து கொண்டு இருந்தது.

வெளிநாடு செல்ல ஒரு சரக்கு கப்பல் நங்கூரம் அகற்றப்பட்டு, விண்ணை பிளக்கும் ஒளி எழுப்பி, புறப்பட ஆயத்தமானது.  மாலுமி, துணை மாலுமிகள், சிப்பந்திகள் என எல்லாரும் அணி வகுத்து, கப்பலுக்கு  சென்று கொண்டு இருந்தனர். இதோ இன்னும் சற்று நேரத்தில் கப்பல் புறப்பட்டுவிடும் என்ற நிலை.

வரலாறு சொல்லும் அந்த ஆலமரத்தில், மாடப்புறா ஒன்று தனது சுற்றம் சூழ வாழ்ந்தது. அதற்க்கு அப்போதுதான் ஒரு (விபரீத) எண்ணம்  தோன்றியது. இந்து கப்பல் அவ்வப்போது எங்கோ செல்கிறது, பின் சில நாட்களில் திரும்ப வந்துவிடுகிறது. எங்கே செல்கிறது? , அது சேரும் இடம் எப்படி இருக்கு, இங்கு உள்ளதுபோல் இவ்வளவு குளிராக இருக்குமா. இல்லை இதமாக இருக்குமோ ?, இங்கு உள்ளது போல் ஆலமர பழங்கள் மட்டும் கிடைக்குமா, இல்லை வித விதமான உணவு கிடைக்குமோ?, என அலைபாயும் எண்ணங்கள் அதற்க்கு கடலின் அலைகளை விட வேகமாக அடித்தது.

அதையும் பார்த்துவிடலாம் என்ற எண்ணம் காண நேரத்தில் முடிவு செய்ய தூண்டியது. ஏனென்றால் சைரன் ஒலி எழுப்பியபின் எவ்வளவு நேரத்தில் கப்பல் புறப்படும் என்பது அந்த புறாவுக்கு மிகவும் நன்கு பரிச்சயம். இப்போது இரண்டாவது சைரனும் ஒலித்துவிட்டது. ஆஹா இன்னும் சில வினாடிகளில் கப்பல் புறப்பட்டுவிடும். புதிய உலகம், புதிய வானம் காண புறப்பட்டு விட்டது அந்த மாடப்புறா.

பறந்து சென்று கப்பலின் மேலே இருக்கும் கொடிக்கம்பத்தின் குறுக்கு கம்பியில் போய் உக்கார்ந்து விட்டது.

தனது எண்ணத்தை, தனது முடிவை, தனது புறப்பாடை தனது சகாக்கள் உள்ளிட்ட யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. எண்ணத்திற்கு தனியே சிறகு முளைக்க எடுத்து ஓட்டம். விடிந்தால் தெரிந்து கொள்ளட்டும் காணவில்லை என்று, என தனக்கு தானே ஊக்கம் செய்து கொண்டது.

மாத கணக்கில் தண்ணீரில் பயணிக்கும் கப்பல் அது என்பது இந்த (மட) புறாவுக்கு இதுவரை தெரியாது.

கப்பல் புறப்பட்டு விட்டது. பயம் கொஞ்சம் இருந்தாலும் ஆர்வம் மேலோங்கி விட்டதால், கம்பியை இறுக பற்றிக்கொண்டு கப்பலோடு இடம்பெயர ஆரம்பித்து விட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் வானில்  வெளிச்சம் பரவியது. புறாவின் மனதிலும்ஒளி பரவியது.

தண்ணீரில் கப்பல் வேகமெடுக்க வெகுதூரம் கடந்ததாகவே அதற்க்கு தோன்றியது, காரணம் சுற்றிலும் ஊர் எதுவும் தெரியவில்லை, எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர்,தண்ணீர்.  புறாவுக்கு சிறிது தாகம் எடுத்து, சுற்றி தண்ணீர் இருந்தும் தாகம் தணிக்க முடியவில்லை. காரணம்  கப்பலின் வேகம் குறையாமல் பயணித்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் பசி எடுக்க தொடங்கியது. தாகம் தீர்க்கவே முடியாத நிலையில் பசியாற்ற வழி எங்கே இருக்கிறது. வெகு நேரம் கம்பியை இறுக  பிடித்ததால் கால்களும் ஓய்ந்தது.

தவறை சற்றே உணர்ந்த புறா, திரும்ப தனது இருப்பிடம் திரும்பிவிடலாம் என நினைத்த மாத்திரத்தில் இருப்பிடம் நோக்கி பறக்க ஆரம்பித்தது. கரையை விட்டு வெகு தூரம் வந்துவிட்டதை  கூட அதனால் உணர முடியவில்லை. பறந்தது பறந்தது பறந்து கொண்டே இருந்தது  ஆனால் கண்ணுக்கு எட்டியவரை கரை தெரியவில்லை.

தன்னால் திரும்ப கரையை (இருப்பிடத்தை) அடைய முடியம் என்ற நம்பிக்கையை இழக்க தொடங்கியது. எனவே திரும்பவும் கப்பலையாவது எட்டிவிடலாம் என நினைத்து கப்பலை நோக்கி பறக்க திரும்பியது, கொஞ்ச தூரம் கப்பலை நோக்கி பறந்தது. கப்பலின் வேகத்தை புறாவின் வேகம் விஞ்ச முடியும், ஆனால்  அதற்க்கு உண்டான தாகம், பசி, மயக்கம் எல்லாவற்றிக்கும் மேலாக அதற்க்கு ஏற்பட்ட அவநம்பிக்கை அதன் வேகத்தை  குறைத்து.

தன் இருப்பிடமே நிரந்தரம் என்பதை காலம் கடந்து உணர்ந்த புறா, திருப்பவும் கரையை நோக்கி பறக்க தொடங்கியது.

இவ்வாறு வெல்வேறு எண்ணங்கள் மாறி  மாறி தோன்றுவதும் மறைவதுமாக இருக்க, திக்கு தெரியாமல், உடல் வருந்தி, மனம் சோர்ந்து, புயலுக்கு நடுவே எரியும் மெழுகுவர்த்தியை போன்ற நிலை அந்த புறாவுக்கு ஏற்பட்டது.

மேலே வானம், கீழே தண்ணீர், திசைகள் எல்லாம் வெறும் காற்று, பற்றி நிற்க இடமில்லை, பருக நீரில்லை, உண்ண உணவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது  உடலின் ஆற்றல், மற்றும் நம்பிக்கை. அதன் ஆற்றல் மற்றும்  நம்பிக்கை சூன்யம் ஆனதால் கடலில் வீழ்ந்து சுறாவுக்கு இரையானது.

 கதை உணர்த்தும் நீதி : இருப்பதை விட்டு பறக்க நினைக்க கூடாது. தன்னிலை உணர வேண்டும். முடிவுகளை தீர்க்கமாக எடுக்கவேண்டு. எடுத்த முடிவில் உறுதியாக பற்றி  இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக