TAMIL MORAL STORIES

குறையா நிறையா?



 ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதன் எஜமானன் கூறினான்.

“பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

TAMIL MORAL STORIES


குரங்கு அறிஞர் !


 ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

TAMIL MORAL STORIES

 பூவுலகம் போ !




முன்னொரு காலத்தில் இந்திரத்யும்னன் என்ற அரசன் இருந்தான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். முதுமை அடைந்த அவன் இறந்து போனான். சொர்க்கத்திற்கு வந்த அவனை இந்திரன் வரவேற்றான்.

“”பூவுலகில் உன் புகழ் பேசப்படும்வரை இங்கே தங்கி இருக்கலாம்!” என்றான் இந்திரன்.

எண்ணற்ற ஆண்டுகள் சென்றன. அவனை அழைத்த இந்திரன், “”பூவுலகில் எங்கும் உன் புகழ் பேசப்படுவதாக தெரியவில்லை. நீ இனிமேல் இங்கே தங்கியிருக்க முடியாது!” என்றான்.

அவன் வருந்துவதைப் பார்த்த இந்திரன், “”பூவுலகில் உன் பெயரைப் பேசுபவர் ஒருவர் இருந்தால் போதும். நீ மீண்டும் இங்கேயே தங்கலாம்!” என்றான்.
நம்பிக்கையுடன் பூவுலகம் வந்தான் அவன். என்றும் இளமையாக வாழும் மார்க்கண்டேய முனிவரிடம் சென்றான். தன் கதையை அவரிடம் சொன்னான்.
“”நீங்கள் இந்திரத்யும்னன் என்ற பெயரைக் கேட்டு இருக்கிறீர்களா? நன்றாக நினைவுபடுத்திச் சொல்லுங்கள்!” என்று கேட்டான்.

“”அப்படி ஒரு பெயரைக் கேட்டதாக எனக்கு நினைவு இல்லையே!” என்றார் அவர்.

“”எல்லையற்ற வாழ்நாளை உடையவர் நீங்கள். என் பெயரைக் கேட்டது இல்லை என்கிறீர்களே. நான் என்ன செய்வேன்?” என்று கண் கலங்கினான் அவன்.

உதவி செய்ய நினைத்த அவர், “”என்னிலும் மூத்ததான கோட்டான் ஒன்று இமயமலையில் வாழ்கிறது. உன் பெயர் அதற்குத் தெரிந்து இருக்கலாம். என்னுடன் வா!” என்றார்.

அவர்கள் இருவரும் இமயமலை வந்தனர். அங்கிருந்த கோட்டானிடம் அவர், “”நீ இந்திரத்யும்னன் என்ற அரசனின் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறாயா? நன்றாக நினைவுப்படுத்திச் சொல்!” என்றார்.

“”அப்படி ஒரு அரசனின் பெயரை நான் கேள்விப்பட்டது இல்லை. அருகில் இந்திரத்யும்னன் என்ற ஏரி உள்ளது. அங்கே என்னிலும் மூத்ததான ஆமை ஒன்று வாழ்கிறது. அதற்கு அந்த அரசனைத் தெரிந்து இருக்கலாம்!” என்றது.
அவர்களுடன் ஏரிக்கரைக்கு வந்த அது ஆமையை அழைத்தது.

கரைக்கு வந்த ஆமை, “”எதற்காக என்னை அழைத்தாய்?” என்று கேட்டது.
“”இந்திரத்யும்னன் என்ற அரசனின் பெயரை நீ கேள்விப்பட்டு இருக்கிறாயா?” என்றது கோட்டான்.

அந்தப் பெயரைக் கேட்டதும் ஆமை தன்னை மறந்தது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

“”வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிய அந்த வள்ளலைப் பற்றியா கேட்கிறாய்? அவர் கொடையாகக் கொடுத்த பசுக் கூட்டங்கள் துள்ளிக் குதித்ததால் ஏற்பட்ட பள்ளமே இந்த ஏரி. அவர் தாரை வார்த்த நீரால்தான் இந்த ஏரியே நிரம்பியது. அவர் செய்யாத வேள்விகளே இல்லை. எப்படி நான் அவரை மறப்பேன்!” என்று தழுதழுத்த குரலில் சொன்னது.

அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. வானுலகத் தேர் ஒன்று அங்கே பறந்து வந்தது. அதில் இருந்த தேவர்கள் இந்திரத்யும்னனை வணங்கினர்.

“”உங்கள் புகழ் இங்கே நிலைத்து உள்ளது. சொர்க்கத்திற்கு வாருங்கள்!” என்று அழைத்தனர்.

ஏரிக்கரையில் இருந்த அவர்களுக்கு நன்றி சொன்னான் அவன். பிறகு தேரில் ஏறி விண்ணுலகம் சென்றான்.

தர்மத்தின் மகிமையை பார்த்தீர்களா குட்டீஸ்…

TAMIL PANCHA THANTHRA STORIES

 

முட்டாளுக்கு புத்தி சொன்னால்?

TAMIL MORAL STORIES

 

அன்னப்பறவை!



வாத்து முட்டைகளுடன் அன்னப்பறவை ஒன்றின் முட்டையும் கலந்துவிட்டது. இதை அறியாத வாத்து எல்லா முட்டைகளையும் அடை காத்தது. முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவந்தன.

ஒரு குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதையும், அழகாக நடப்பதையும் கண்டு தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் பொறாமை கொண்டன.
எப்பொழுதும் அதைக் குறை சொல்லிக் கொண்டே இருந்தன. அவற்றின் தொல்லை தாங்காமல் தவித்தது அன்னப் பறவையின் குஞ்சு.

“என் மீது எந்தத் தவறும் இல்லையே. ஏன் என்னிடம் எல்லாரும் வெறுப்புக் காட்டுகின்றனர்’ என்று வருந்தியது அது.

அன்னப் பறவையின் கூட்டம் ஒன்று அங்கே பறந்து வந்தது. வாத்துக் கூட்டத்தில் அன்னப் பறவை ஒன்று இருப்பதைக் கண்டது.

“”நீ ஏன் இங்கே இருக்கிறாய்? எங்களுடன் வா,” என்று அழைத்தது அன்னப் பறவை ஒன்று.

“”நான் எங்கள் கூட்டத்துடன் இருக்கிறேன். எதற்காக என்னை உங்களுடன் அழைக்கிறீர்கள்? நீங்கள் யார்?” என்று கேட்டது அன்னப் பறவையின் குஞ்சு.

“”நீ வாத்து அல்ல. எங்களைப் போன்ற அன்னப் பறவை. வானத்தில் நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றல் உனக்கு உண்டு. உன் வடிவத்தை அந்த நீர்நிலையில் பார். எங்களைப் போலவே இருப்பது தெரியும்,” என்றது இன்னொரு அன்னப் பறவை.

நீர் நிலையில் தன் வடிவத்தை அப்பொழுதுதான் பார்த்தது அது. வாத்துக் கூட்டம் தன்னை வெறுப்பதன் காரணமும் புரிந்தது.

அன்னப் பறவைகளுடன் சேர்ந்த அது வானத்தில் பறந்து செல்லத் தொடங்கியது.

MARIYATHAI RAMAN STORIES

 

                            நேர்மை கொண்ட உள்ளம்




மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.

மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ.

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க” என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து
அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார். 

TAMIL MORAL STORIES

 

கிழவர் கேட்ட கேள்வி!





பாண்டிய நாட்டை ராசராசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் உடையவள்; சிறந்த அழகியும் கூட.

தனக்கிருந்த கொஞ்சநஞ்ச இசை ஞானத்தை வைத்துக் கொண்டே மிகுந்த பெருமையடைந்தாள் அரசியார். தன்னை மிஞ்சிய இசை ஞானமுள்ளவர்கள் யாரும் இல்லை என்பது அவள் எண்ணம்.

அரசியைப் புகழ்ந்து அவளது சிறப்பை பாராட்டியே தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டது காக்கா கூட்டம் ஒன்று.

வருடா வருடம் கோயிலில் விழா நடைபெறும். அப்பொழுதெல்லாம் பாணபத்திரர் என்ற இசைக்கலைஞர் மிகவும் அழகாக இசை நிகழ்ச்சி நடத்துவார். அவர் இறந்த பின், அவரது மனைவி இறைவனைப் புகழ்ந்து பாடுவாள்.

ராசராசன் பதவிக்கு வந்த பிறகு, அவனது மனைவியான அரசியாரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பாணபத்திரரின் மனைவி மிகுந்த வேதனை அடைந்தாள். “சரி! நமக்கு விதித்தது இவ்ளோதான்!’ என சிலகாலம் ஒதுங்கி இருந்தாள்.

அந்த வருடமும் வழக்கம் போல் திருவிழா வந்தது. இறைவனை எப்படியாவது பாடித் துதிப்பது என்று முடிவு செய்தாள். வழக்கம் போல் அரசியாரின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று ஜனங்கள் மெல்ல எழுந்து செல்ல ஆரம்பித்தனர். அதைக் கண்டதும் மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னான்.

கோயிலில் ஒரு மூலையில் அமர்ந்து பாணபத்திரரின் மனைவி இறைவனைத் துதித்து பாடிக் கொண்டிருந்தாள். மக்கள் அவளது இசையில் மயங்கி அங்கே சென்றனர். இதைக் கேள்விபட்ட அரசியார் கொதித்துப் போனார்.

“”அன்பே! என்னை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவள் இப்படி நடந்துக் கொண்டாள். இவளுக்கு சரியான தண்டனை கொடுங்கள்!” என்றாள்.

பாணபத்திரரின் குடும்பத்திற்கு தன் தந்தையார் காலத்தில் கொடுக்கப்பட்ட மரியாதையை மன்னன் அறிவான். எனவே, அக்குடும்பத்திற்கு எதிராக செயல்பட பயந்தான். இருப்பினும் தன் மனைவியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக பாணபத்திரரின் மனைவியை பழிவாங்க நினைத்தான்.

அச்சமயத்தில் ஈழநாட்டு பெண் ஒருத்தி இசைக் கலையில் பெரும்புகழ் பெற்றிருந்தாள். எனவே, அவளை அழைத்து வந்து நாட்டில் இசைக்கச்சேரி வைத்தான். கச்சேரி முடிவில், “”என்னுடன் போட்டியிட யார் தயார்?” என்றாள்.

அப்படி கேட்க வைத்ததும் மன்னர் தான். உடனே மன்னன் பாணபத்திரரின் மனைவியைப் பார்த்து, “”அம்மையீர்! நீங்கள் தான் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும்!” என்றான்.

“”பணம், புகழுக்காக இல்லை. நாட்டின் பெருமைக்காக கலந்து கொள்கிறேன்!” என்றார்.

உடனே போட்டியின் திட்டங்களை மன்னன் அறிவித்தான்.

“”மூன்று நாட்கள் போட்டி நடைபெறும். நடுவர் தீர்ப்பே இறுதியானது. ஈழநங்கை வெற்றி பெற்றால் அரசவைக் கலைஞராக்கப்படுவார். பாணபத்திரரின் மனைவி தோற்றால் நாடு கடத்தப்படுவார்…” என்றான்.

முதல் நாள் போட்டி துவங்கியது. ஈழ மங்கையின் இசை அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் அரசரின் கட்டளைப்படி அவளே சிறந்த இசை வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நாளும் தீர்ப்பு இப்படியே வழங்கப்பட்டது.

பாணபத்திரரின் மனைவி, மன்னன் தனக்கெதிராக
போட்டுள்ள சதித்திட்டம் என்பதை புரிந்து கொண்டு இறைவனிடம் கூறி அழுதாள்.

” “இறைவா நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்!” என்று முறையிட்டாள்.

மூன்றாவது நாள் போட்டி துவங்கியது. திட்டமிட்டபடியே ஈழத்து மங்கை தான் சிறப்பாக இசைத்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து முதியவர் ஒருவர் எழுந்து நின்றார்.

“”மன்னா! இந்த எளியவன் சில வார்த்தைகள் பேசலாமா?” என்றார்.

“”பேசுங்கள்!” என்றான் மன்னன்.

“”நடுவர்களே… எந்த அடிப்படையில் ஈழமங்கையின் இசைதான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கினீர்கள்?” என்றார்.

திடுக்கிட்டனர் நடுவர்கள். முதியவர் ஈழத்து நங்கையின் இசையையும், பாணபத்திரரின் மனைவி இசைத்த இசை இரண்டிற்கும் உள்ள சிறப்புகளையும், குறைகளையும் புட்டு புட்டு வைத்தார்.

“”பாணபத்திரரின் மனைவி இத்தனை சிறப்பாக இசைக்க, அவரை எப்படி தோற்றவர் என்று சொன்னீர்கள்?” என்றார் முதியவர்.

மன்னரின் முகத்தை பார்த்தனர் நடுவர்கள். “”நீங்கள் எல்லாம் என்ன நடுவர்கள். மனசாட்சி படி தீர்ப்பு வழங்காமல் பொய் தீர்ப்பு அளிக்கிறீர்களே…?இது எந்த விதத்தில் நியாயம்?” என்றார் முதியவர்.

“”நடுவர்களே… இசைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு. இசைக்கு அநீதி செய்வதன் மூலம் இறைவனையே அவமதிக்கிறீர்கள். இசைப்பட வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் எங்கே? வசைபட வாழ்ந்து முன்னோர் பெயருக்கு அவப்பெயரை கொண்டு வரும் இந்தப் பாண்டியன் எங்கே?” என்றார் கிழவர்.

கடும் சினம் கொண்ட மன்னன், “”என்னையே குற்றம் சாட்டும் அளவிற்கு உங்களுக்கு என்ன துணிச்சல்? பிடித்து இந்தக் கிழவரை கட்டுங்கள்,”
என்றான்.

கிழவரைத் தொட்ட காவலர்கள் மின்சாரத்தை தொட்டதுபோல் கீழே விழுந்தனர்.

மறுநிமிடம் கிழவரைக் காணவில்லை. கோயில் கிடுகிடுவென நடுங்கியது. அனைவரும் திடுக்கிட்டனர். கிழவர் இருந்த இடத்தில் இறைவன் காட்சியளித்து மறைந்தார்.

அதிர்ச்சியடைந்த ராசராசன் தரையில் விழுந்தான். தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான்.

“”நீதி தவறி செயல்பட்ட நான் இனி அரியணையில் அமருவதற்கு தகுதி இல்லை. இந்தக்கணமே நான் அரச வாழ்வை துறந்து ஆன்மீக வாழ்விற்குச் செல்
கிறேன்!” என்றான். தன் மகனிடம் அரச பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டான் மன்னன்.

குட்டீஸ்… எப்பவும் நியாயமா நடந்துகிட்டா மன்னனுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்குமா? ஏழைகள்தானே என்று நினைத்து அவர்களை ஒடுக்க நினைத்தால் அவர்களுக்காக இறைவனே இறங்கி வந்து வழக்காடுவார் என்பதை மறந்துடாதீங்க. 

TAMIL : TENALI RAMAN STORIES

தென்னை மரம்

கதையாசிரியர்: தெனாலிராமன்


 அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார்.

அவர் அரசரிடம், “அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்று விட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்…” என்று முறையிட்டார்.

அதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். “அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார்.

அதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார்.

அப்போது அரசர் “என்ன செய்யலாம்?” என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார்.

தெனாலிராமன் புரிந்து கொண்டு, “தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்…” என்றார்.

அரசர், “சரி” எனவே, தெனாலி அந்த நபரிடம், “நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து வா…” என்று அவனை அனுப்பி விட்டார். – மறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர். – இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார். – “அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா?” என்றார். – அதற்கு அவன், “ஆம் ஐயா!” என்றான்.

“சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு…” என்றார் தெனாலிராமன்.

அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான்.

சபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. “தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?” என்று திகைத்தார். – பிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், “சரி… இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை…” என்றார்.

அந்த மனிதரிடம் ஏமாற்றம்.

அப்போது தெனாலிராமன் தொடர்ந்து, “இன்னொரு விஷயம்… அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்…” என்று கூறி விளக்கினார்.

“அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு…” என்றார் வாங்கியவரிடம்.

திரும்பப் பெற்றவரிடம், “காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்…? ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும்… அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப் போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக் கூடாது; நீயும் பறித்துக் கொள்ளக் கூடாது…” என்றார்.

தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார்.

திரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம்.

புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார்

TAMIL : TENALI RAMAN STORIES

 

செத்தவன் பிழைத்த மர்மம் !

TAMIL : TENALI RAMAN STORIES

 

வித்தைக்காரனை வென்ற கதை

TAMIL : TENALI RAMAN STORIES

 

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

TAMIL : TENALI RAMAN STORIES

 

பிறந்த நாள் பரிசு

TAMIL : TENALI RAMAN STORIES

 

வித்தைக்காரனை வென்ற கதை

கதையாசிரியர்: தெனாலிராமன்



தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.

ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் “அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் ” என்றவாறு முன்னால் வந்து நின்றான்.

அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ‘ உன் வித்தைகளையும் காட்டு ‘ என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். “உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்.”என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்.”அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்.”என்றான்.

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக “ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு” என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து “இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்” என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? ” நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க” ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு ” தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் ” என்றார்.

இராமன் “அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்.” என்று கேட்டுக் கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.