எண்ணமே வாழ்கை ( சிறுகதை)

 ஒரு ஊருல ராஜா இருந்தார், அவருக்கு ஒரு மந்திரி, இவங்க ரெண்டு பேரும்  ஒருநாள் மாலை நேரம் நடை பயிற்சி போனார்கள்.

 அப்போ அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்" ன்னு சொன்னார்.

மந்திரி பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.

ராஜா சொன்னார். யோவ் மந்திரி.!! அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம்.

வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.

ராஜா கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.

அந்த குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும் ன்னு.

ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.

ராஜா குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.? எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னான். ராஜா..!! இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.

ராஜாவுக்கு சந்தோஷம்.

இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.

கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.

இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம். மந்திரிய கூப்பிட்டார்.

ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...

வைரத்தை முழுங்கித்தொலைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டார்.

ராஜா சொன்னார். மந்திரி.!! போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா. அவன்தான் காரண காரியத்தோட சரியாக சொல்லுவான்.

மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார். டேய் இது ஒரிஜினல் வைரமா.? போலி வைரமா.? இல்லன்னா ரெண்டும் கலந்து இருக்கா ன்னு பார்த்து சொல்லு.

அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை கையில எடுத்து பிரிச்சு.... ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான்.

வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.

ராஜாவுக்கு ஆச்சர்யம்.

எப்படிப்பா கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?

குருடன் சொன்னான்.

ராஜா.!! வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன்.

ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன குடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார்.

இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.

யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட கேட்கிறார். எல்லா பொண்ணுமே நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி சொல்றார்.

ராஜா பார்த்தார்.

கூப்புடுங்கடா அந்த கபோதிய.

குருடன் வந்தான்.

ராஜா குருடன் கிட்ட சொன்னார். என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன். எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.

குருடன் சொன்னான்.

ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.

ராஜாவுக்கு ஒரே குஷி.

சபாஷ்.!! இந்தா டோக்கன். அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.

குருடனும் போய்ட்டான்.

கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார்.

டேய்.!!

நான் ஒன்னு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.* அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல எல்லோரும் என்னைய

பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.? சரியா சொல்லனும் என்றார்.

குருடன் அமைதியா இருந்தான்.

பதிலே பேசல.

ராஜா திரும்ப கேட்டார்.

குருடன் அமைதியா சொன்னான்.

ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.

நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான்.

ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.

ராஜா...

முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு இலவச டோக்கன்.

நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.

அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.

ஆனா நீங்க குடுத்தது பட்டை சாத டோக்கன்.

மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார்.

நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை சாத டோக்கன்.

ஆக.... சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?

நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.? ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும் முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.

மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.

நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் பணமோ,சொத்தோ, பதவியோ  தீர்மானிப்பதில்லை..

உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன

தீதும் நன்றும் பிறர்தர வாரா

சிறுகதை

 ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்.

முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்.

கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்.

பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை. கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்.  காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது

ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்....

பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே.  இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!

 

அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்.

நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்.

 

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்.

கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார்

இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....

தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார், இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது

இது தான் உலகநியதி

நாம் எதைத் தருகிறோமோ அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....

நல்லதை தந்தால் நல்லது வரும்,... தீமையை தந்தால் தீமை வரும்

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,  ஆனா....  நிச்சயம் வரும்

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்

 சிறுகதை  - நல்லவர் என்றும் நல்லவரே.


ஒரு காலத்தில் ஆரோன் என்ற பெயரில்  கடினமாக உழைக்கும் ஒரு  எறும்பு இருந்தது. அது  எறும்புகளின் காலனியில் தலைவனாக வாழ்ந்தது, குளிர்காலத்திற்கான உணவை சேகரிக்க ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து. மற்ற எல்லா எறும்புகளும் தனக்கென உணவைப் பதுக்கி வைப்பதில் மும்முரமாக இருந்தபோது, ஆரோன்  தன் வழியைக் கடக்கும் ஒவ்வொரு எறும்புகளுடனும், தான் வைத்திருந்த  உணவைச் பகிர்ந்து கொண்டது, எதற்கும் உதவாத சோம்பேறிகளுக்குக் கூட தன் அருளைப் பகிர்ந்துகொண்டார்.


ஒரு நாள், எறும்பு கூட்டத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது, உணவு கிடைக்கவில்லை. ஆரோன் தவிர அனைத்து எறும்புகளும் சந்தோஷத்தில் இருந்தன. ஆரோன் மட்டும் வருத்தத்தில் இருந்தது,  மற்றவர்களிடம் காட்டிய கருணையை நினைவில் வைத்துக் கொண்டாள், நிச்சயமாக யாராவது தனக்கு  உதவி செய்வார் என்று நம்பியது.


ஒருமுறை ஆரோன் உணவளித்த ஒரு வெட்டுக்கிளி போதுமான அளவு உணவுடன் ஆரோன்  வீட்டு வாசலில் தோன்றியது. அப்போது தனக்கு கிடைத்த உணவை மற்ற எறும்புகளுடன்   பகிர்ந்து உண்டது. மேலும் கருணை உள்ளவன் நிச்சயம் ஒருநாள் கருணை பெறுவான் என்ற உண்மையை கற்றுக்கொண்டது. அன்று முதல், எறும்புகள் அனைத்தும் ஒன்றாக உழைத்து, தங்கள் உணவைப் பகிர்ந்து கொண்டு, கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.


 சிறுகதை - தங்க முட்டை 

ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், அழகர் என்ற ஏழை விவசாயி வசித்து வந்தார். அவரது கஷ்டங்கள் இருந்தபோதிலும், அழகர் ஒரு மகிழ்ச்சியான மனிதர் மற்றும் நம்பிக்கை அதிகம் கொண்ட மனிதரும்  கூட,. ஒரு நாள், மேகங்களை அடைந்த ஒரு மந்திர ரதம்   அவர் வீட்டருகே இறங்கியது. மந்திர லோகத்தில் சிறந்ததைப் பெறுவதற்கான ஆர்வத்தில், அழகர், அந்த ரதத்தில்  ஏறி மந்திர லோகத்தை அடைந்தார்.

அங்கு வசித்த பூதம்  தங்க முட்டையிடும் கோழி பாதுகாத்து வந்தது. அழகர், ஒரு புத்திசாலித்தனமான மனிதராக இருந்ததால், கோழியைத் திருடி அதை கிராமத்திற்கு கொண்டுவந்தார்.  அவரும் அவரது குடும்பத்தினரும் தங்க முட்டைகளின் விற்பனையில் வசதியாக வாழ்ந்தனர். தானும் தனது கிராமத்தினரும் வசதியடைந்தனர்.

இருப்பினும், பூதம்  விரைவில் கோழி திருட்டைக்கண்டுபிடித்தது. தனது கோழியை தேடி பூமிக்கு வந்தது. பூமியில் கோழியை வைத்திருந்த அழகருடன்  துணிச்சலுடன் சண்டையிட்டது , அழகர் அந்த பூதத்தை வெட்டி சாய்த்தார். தனது கிராமத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அன்றிலிருந்து, கிராமத்தின் நாயகனாக அறியப்பட்ட அழகர் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.


 

எழுத்து பிழை என்ன செய்யும்  (சிறுகதை)

 


 மாஞ்சோலை  என்ற  கிராமத்தில் மாடசாமி என்ற  விவசாயி வாழ்ந்து  வந்தார், அவரிடம் 2 மாடுகள் இருந்தன.  பூஞ்சோலை  என்ற கிராமத்தில் வசிக்கும் பொன்னையா என்கிற  மாட்டு வியாபாரி, மாடசாமி- யிடம், மாடுகளை விலைக்கு கேட்க  சென்றார். அக்காலத்தில் இருந்த முறையான இருவர் கை மீதும், துண்டை போட்டு விரல்களை பிடித்து அழுத்தி  மற்றவர்கள் அறியாவண்ணம் விலையை பேசி கொண்டனர். விலை திகைய வில்லை. (உடன்பட வில்லை)

இருப்பினும் பொன்னையா, மாடசாமியிடம் "நான் சில நாள்கள் கழித்து மாடுகள்  வாங்க வருகிறேன் என்றும், வரும்போது கடிதம்  போடுகிறேன்" எனவும்  சொல்லி சென்றார்.

அவ்வாறே பொன்னையா கடிதம் எழுதினார், அந்த  கடிதத்தில்  "நான் வரும் வெள்ளிக்கிழமை மாடு கள வாங்க வருகிறேன்" என்று  எழுதி அனுப்பிவிட்டார். அந்த கடிதம் மாடசாமியிடம் சேர்ந்த நேரம் தற்செயலாக மாடுகள் காணாமல் போய்விட்டன.

மாடசாமி அந்த கடிதத்தை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து, தன்  மாடுகளை  பொன்னையா தான் திருடிவிட்டார் என குற்றம் சாட்டிவிட்டார். போலீசும் அதை நம்பும்படி ஆனது காரணம், கடிதத்தில் இருந்த எழுத்து பிழை. அதாவது மாடுகள் வாங்க வருகிறோம்  என்பதற்கு பதிலாக மாடு கள வாங்க வருகிறோம் என எழுதியது.

 

நீதி : பேச்சில் ஏற்படும் குற்றத்தின் விளைவு குன்றளவு என்றல் எழுத்தில் ஏற்படும் குற்றத்தின் விளைவு மலையளவு