அக்பர் பீர்பால் கதைகள் (Akbar birbal Stories)

 


 மக்கள் நேர்மையானவர்களா?

ஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், “எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்
உடனே சபையிலிருந்த அனைவரும்ஆம் அரசேஉங்கள் பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே முடியாது.” என்றனர்.

ஆனால் பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், “ஏன் மவுனமாக இருக்கிறாய் பீர்பால்மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன?” என்று கேட்டார். உடனே பீர்பால், “இதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும் அரசேமக்கள் அனைவருக்கும் நீங்கள் விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்,” என அக்பரிடம் வேண்டுகோள் வைத்தார்.

பீர்பால் கேட்பதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட அக்பர், உடனே விருந்து பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.

தண்டோரா போட்டபடியே அனைத்து வீதிகளுக்கும் சென்ற அரசவை அறிவிப்பாளர், “நமது பேரரசர் அனைவருக்கும் விருந்து வைக்கிறார். விருந்துக்கு வருவோர் கண்டிப்பாக ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும். இது அரசு உத்தரவு, ” என்று உரத்த குரலில் அறிவித்தார்.

இதைக் கேட்டு குழப்பமுற்ற மக்களில் பலர், “அரசர் விருந்தளிப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குய விஷயம் தான். ஆனால் குடத்தில் எதற்காக பால் கொண்டு செல்ல வேண்டும், ” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்கள், “சரி ஒரு குடம் பால் தானேகொண்டு போய் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்என்று குழப்பத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

அரசர் அறிவித்த விருந்து நடைபெறும் நாள் வந்தது. அக்பர், பீர்பால் உள்பட அரசவையில் முக்கியப் பதவிகளில் இருப்போர் அனைவரும் கூடியிருந்தனர். பீர்பால் ஏற்பாட்டின் படி, திடலின் பிரதான வாசலில் மிகப் பெரிய பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது. மூடியில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது.
 

பொதுமக்கள் அனைவரும் உத்தரவின் படி தாங்கள் கொண்டுவந்த பாலை, மூடியிலிருந்த ஓட்டை வழியாக பாத்திரத்தில் கொட்டி விட்டு வெறும் குடத்துடன் திடலுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்பர், “நீ சொன்னபடி செய்தாகிவிட்டது பீர்பால். இவ்வளவு பாலையும் என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்டார்.

உடனே பீர்பால் காவலர்களைப் பார்த்து, “பாத்திரத்தை மன்னருக்கு அருகில் கொண்டு வாருங்கள்என உத்தரவிட்டார்.
பாத்திரம் அருகில் கொண்டுவரப்பட்டதும், அதன் மூடியை அகற்றச் சொன்னார் பீர்பால். மூடி அகற்றப்பட்டதும் பாத்திரத்தைப் பார்த்த மன்னர், அதில் வெறும் தண்ணீர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
பீர்பால்என்ன இது, பால் இருக்க வேண்டிய பாத்திரத்தில் வெறும் தண்ணீர் உள்ளதே?” என அதிர்ச்சி மாறாமல் கேட்டார்.

ஆனால் இதை முன்பே எதிர்பார்த்தது போல நிதானமாக பேசிய பீர்பால், “மக்களின் நேர்மை பற்றி என்னிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் அரசே! மற்றவர்கள் பால் கொண்டு வரட்டும், நாம் தண்ணீர் கொண்டு போய் பாத்திரத்தில் கொட்டினால் யார் கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் நினைத்துள்ளனர். எனவே தான் பாத்திரம் முழுதும் தண்ணீர் உள்ளது. கூட இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது அரசே..” என்று சிரித்தபடியே கூறினார்.

பீர்பாலின் அறிவுக்கூர்மையை மெச்சிய அக்பர், அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.

அக்பர் பீர்பால் கதைகள் (Akbar birbal Stories)

 


மரண தண்டனை  யாருக்கு ?

அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு கொண்டுவந்து வைத்தான். கூண்டினுள்ளிருந்த பச்சைக்கிளி சிறகுகளை அடித்துக் கொண்டுகீ’ ‘கீஎன்று கத்தியது. அந்தக் கிளியை அன்புடன் பார்த்துக் கொண்டு இருந்த அக்பர், பின்னர் சபையோர் பக்கம் திரும்பி, “என்னுடைய நெருங்கிய நண்பன் இந்தக் கிளியை எனக்குப் பரிசாக அளித்திருக்கிறான். இந்தக் கிளி அழகாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார்.

 “ஆம், பிரபு! நானும் எத்தனையோ கிளிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்களுடைய கிளியைப் போன்ற அழகான கிளியை இதுவரை நான் பார்த்ததில்லைஎன்றார் தர்பாரில் இருந்த அக்பரின் அதிகாரிகளில் ஒருவரான ஃபயிஸ்கான்!

 உடனே அவர் பக்கம் பார்வையைத் திருப்பிய அக்பர்,“உனக்குக் கிளிகளைப் பற்றி தெரியுமா? எப்போதாவது கிளி வளர்த்தது உண்டா?” என்று கேட்டார்.

 “இன்று வரை நான் பதினைந்திற்கு மேற்பட்ட கிளிகளை வீட்டில் வளர்த்து இருக்கிறேன். ஆனால் அவற்றை விட உங்களுடைய கிளி மிகவும் அழகாக இருக்கிறதுஎன்றான் ஃபயிஸ்கான். இவ்வாறு சொல்லி அக்பரின் மனத்தைக் குளிரச் செய்ய முயன்றான்!

 “மிகவும் நல்லதாகப் போயிற்று. உன்னை மாதிரி கிளி வளர்ப்பதில் அனுபவமுள்ள ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். இதை வளர்க்கும் பொறுப்பை உன்னிடம் தர விரும்புகிறேன். இதை நீ உன் வீட்டுக்கு எடுத்துச் செல்! ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! இந்தக்கிளி இறந்துவிட்டதாக எவன் செய்தி சொல்கிறானோ, அவனுக்கு மரணதண்டனை விதிப்பேன்!” என்று சொல்லி கிளிக்கூண்டை அவன் கையில் தந்தார்.

அதைக்கேட்டு ஃபயிஸ்கானுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனத்திற்குள் தன்னைத் திட்டிக் கொண்டேபிரபு! என்னிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நான் மனமுவந்து ஏற்கிறேன்என்று மிகவும் மகிழ்ச்சியுற்றவன் போல் அவரை வணங்கி எழுந்தான்.

 பின்னர் அவன் கிளிக்கூண்டை வீட்டுக்கு எடுத்துச் சென்றான். ஏற்கெனவே சிடுசிடுவென்றிருந்த அவன் மனைவி கிளிக்கூண்டைப் பார்த்துஇது ஏது? எதற்காக இதைப்போய் வீட்டுக்கு எடுத்து வந்தாய்?” என்றாள். “இதை நம் வீட்டில் வைத்து பாலூட்டி வளர்க்க வேண்டும்என்றான் ஃபயிஸ்கான்.“சரிதான்! யார் இதை வளர்ப்பது?” என்று கேட்டதற்கு, “நீதான்!” என்று ஃபயிஸ்கான் கூறியதும், அவளுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. பின்னர் ஒரு கணம் நிதானித்து,“இதை சக்கரவர்த்தி உனக்குப் பரிசாக அளித்தாரா?” என்று கேட்டாள்.

 அதற்குஆமாம்என்று அவன் தலையாட்டினான். “வேறு யாரிடமாவது இதைக் கொடுத்துவிடு!” என்று அவள் அலட்சியமாகச் சொல்ல, “இதை வேறு யாரிடமும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் பொறுப்பை என்னிடம் சக்கரவர்த்தி கொடுத்து விட்டார். இதற்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், என் தலை உருளும்என்று சொல்லிவிட்டு, தர்பாரில் நடந்ததை விளக்கினான்.

எத்தனை பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கியிருக்கிறாய்?” என்று கூறிய அவன் மனைவி, வேறு வழியின்றி அதை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அன்று முதல், ஜாக்கிரதையாக அவள் அந்தக் கிளியைப் பராமரித்து வந்தாள்.

ஒருநாள் காலை, பயிஸ்கான் கூண்டினுள் நோக்கியபோது, கிளி மல்லாந்து விழுந்திருந்தது, அதைக் குரல் கொடுத்து அழைத்துப், தொட்டுப் பார்த்தும் அது எழுந்திருக்கவேயில்லை. உடனே அவன் தன் மனைவியைக் கூவி அழைத்தான். அவளும் ஓடிவந்து, கிளியை சோதித்துப் பார்த்தவள்,“ஐயோ! கிளி இறந்து விட்டதே!” என்று கூச்சலிட்டாள்.   –

அதைக் கேட்டு ஃபயிஸ்கான், “ஐயோ! என் தலை உருளப்போகிறதே!” என்று தலையில்படீர்’ ‘படீர்என்று அடித்துக் கொண்டு அழுதான். அவன் மனைவி அவனைத் தேற்றினாள். “நான் சொல்வதைக் கேளுங்கள். பீர்பாலிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லுங்கள். அவர் எப்படியாவது உங்களைக் காப்பாற்றி விடுவார்என்று யோசனை கூறினாள். டனே, ஃபயிஸ்கான் கூண்டைத் தூக்கிக்கொண்டு பீர்பால் வீட்டை நோக்கி ஓடினான். அவனைக்கண்ட பீர்பால், கூண்டைக் கையில் எடுத்து வந்திருக்கிறாயே! இந்தக் கிளியை வளர்ப்பதற்கு உன்னிடம் சக்கரவர்த்தி ஒப்படைத்திருந்தார் அல்லவா?” என்றார்.

அதை நான் எப்படிச் சொல்வேன் பீர்பால்! ஜாக்கிரதையாக இதை வளர்த்தும், இன்று காலை இது திடீரென இறந்து விட்டது. இந்த செய்தியைக் கேட்டால், சக்கரவர்த்தி எனக்கு மரண தண்டனைதான் அளிப்பார்! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கூறினான் ஃபயிஸ்கான்.

 

கடவுளே! நீ நன்றாக ஆபத்தில் சிக்கிக் கொண்டாயே! சரி, எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றி விட்டது. நீ வா என்னுடன்! சக்கரவர்த்தியை சந்திப்போம்என்று கூறிய பீர்பால் முன்னே செல்ல, பின்னால் ஃபயிஸ்கான் நடுங்கிக் கொண்டே கூண்டைச் சுமந்து கொண்டு நடந்தான்.

 

அக்பர் தர்பாருக்கு வருமுன்னரே இருவரும் அங்கு வந்து விட்டனர். அக்பர் தர்பாரில் நுழைந்து, ஆசனத்தில் அமர்ந்ததும் அக்பர் அவரை நோக்கிஎன்ன விஷயம்?” என்று கேட்டார்.

உடனே, கிளிக்கூண்டை எடுத்துக் கொண்டு அவரை அணுகிய பீர்பால், கிளியைச் சுட்டிக்காட்டி, “பிரபு! உங்களுடைய கிளி யோகாசனம் கற்றுக் கொண்டு இருக்கிறது. பாருங்களேன்!” என்றார்.

 உற்றுப் பார்த்த அக்பர் கோபத்துடன்என்ன உளறுகிறாய்? கிளி இறந்து விட்டது! எங்கே அந்த முட்டாள் ஃபயிஸ்கான்? அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறேன்!” என்றதும், பயந்து கொண்டே ஃபயிஸ்கான் முன்னே வந்தான். “தயவு செய்து நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்என்ற பீர்பால் தொடர்ந்து, “பிரபு! அன்று ஒருநாள் இந்தக் கிளியை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பை ஃபயிஸ்கானிடம் ஒப்படைத்தபோது நீங்கள் சொன்னது நினைவு இருக்கிறதா? “இந்தக் கிளி இறந்துவிட்டது என்ற தகவலைச் சொல்பவனுக்கு மரண தண்டனைஎன்றீர்கள். அவ்வாறு சொன்னது நீங்கள்தானே!” என்றார்.

 ஆம்! அப்படித்தான் சொன்னேன்!  இன்றும் அதையே சொல்கிறேன். என்னுடைய கிளி இறந்து விட்டது.

அதனால்…” என்ற அக்பரை இடை மறித்தார் பீர்பால்.

கிளி இறந்து விட்டது என்று சொன்னது நீங்கள்தான்! அதை ஃபயிஸ்கான் சொல்லவில்லை. அதனால் இப்போது யாருக்கு மரண தண்டனை தரவேண்டும்?” என்றார் பீர்பால். இதைக் கேட்டு அக்பர் உரக்கச் சிரித்தார்.

பீர்பால்! நல்ல சமயத்தில் என் கண்களைத் திறந்து விட்டாய். ஒரு கிளிக்காக என் நல்ல அதிகாரிகளில் ஒருவனுக்கு மரண தண்டனை அளிப்பது சரியல்ல!” என்றார். ஃபயிஸ்கானுக்குப் போன உயிர் திரும்பி வர, பீர்பாலுக்கு நன்றி  கூறினான்

அக்பர் பீர்பால் கதைகள் (Akbar birbal Stories)


  வெயிலும், நிழலும்

அன்று சக்கரவர்த்தி அக்பர் ஏதோ காரணத்தால் காலையிலிருந்தே எரிச்சலுடன் இருந்தார். அவருடைய கோபத்தைத் தணிக்க விரும்பிய பீர்பல், “பிரபு! நீங்கள் இவ்வாறு இருப்பது சிறிதும் நன்றாகயில்லை. சிறிது சாந்தமாக இருக்கக்கூடாதா?” என்று பணிவாகக் கூறினார்.

எப்போது சாந்தமாக இருக்க வேண்டும், எப்போது கோபமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டிது இல்லை!” என்று அக்பர் பீர்பல் மீது எரிந்து விழுந்தார். “அதற்கு சொல்லவில்லை பிரபு! சிடுசிடுவென்று இருந்தால் இயற்கையில் அழகான உங்கள் முகம் விகாரமாக மாறிவிடுகிறது!

அதனால்…” பீர்பலை இடைமறித்த அக்பர்என்ன தைரியம் இருந்தால் என்னை சிடுமூஞ்சி என்றும் விகாரமானவன் என்றும் குறிப்பிடுவாய்? இனி, உன் முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை! எங்காவது கண்காணாத இடத்திற்கு ஒழிந்து போ!” என்றார். இதைக் கேட்டு மனமுடைந்த பீர்பல் உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்.

அடுத்த நாள் அக்பர் தர்பாருக்கு வந்ததும் சபையில் பீர்பல் மட்டும் காணப்படாததை கவனித்த அக்பர் அவரைப்பற்றி விசாரித்தார். தர்பாரில் ஒருவர் எழுந்து நின்று, “பிரபு! நேற்று நீங்கள் அவர்மீது கோபமுற்று இந்த நகரத்தை விட்டுக் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுமாறு கட்டளையிட்டீர்களாம்!

 அதனால் பீர்பல் தலைநகரை விட்டுச் சென்று விட்டார்!” என்றார். “அடடா! பீர்பல் உண்மையாகவே சென்று விட்டாரா?” என்று அக்பர் வருந்தினார். தான் அவ்வளவு கடுமையாகத் பேசியிருக்கக்கூடாது என்று உணர்ந்த அக்பர் தன் தவறுக்காக வருந்தினார்.

பீர்பலை மீண்டும் சந்திக்க வேண்டுமென்று அவர் மனம் அடித்துக் கொண்டது. ஆனால் பீர்பல் எங்கு சென்று விட்டார் என்று யாருக்கும் தெரியவில்லை. அன்று முழுவதும் பீர்பல் எங்கு சென்றிருக்கக்கூடும் என்பது பற்றியும், அவரை எவ்வாறு மீண்டும் திரும்பி வரவழைப்பது என்றும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்த அக்பருக்கு, இறுதியாக ஒரு யோசனை தோன்றியது.

உடனே அவர் மந்திரியை அழைத்துமந்திரியாரே! கொளுத்தும் நடுப்பகல் வெயிலில் குடையின்றி ஒருவன் பிரதான சாலையில் நடந்து வரவேண்டும். அப்படி வருபவனுக்கு நூறு பொற்காசுகள் தரப்படும் என்று ராஜ்யமெங்கும் தண்டோராப் போடுங்கள்!” என்றார்.

பிரபு! இப்போது கடுங்கோடை காலம்! குடையில்லாமல் அரை மணிநேரம் நடந்தாலும் நடப்பவன் சுருண்டு விழுந்து விடுவான். அப்படிஇருக்க யார் தங்கள் உயிரை நூறு பொற்காசுக்காக விட முன்வருவார்கள்?” என்றார். “நான் சொல்வது போல் தண்டோராப் போட்டு அறிவியுங்கள்! போதும்!” என்றார் அக்பர். உடனே மந்திரியும் அக்பரின் விருப்பப்படி ராஜ்யமெங்கும் தண்டோராப் போட்டு அறிவித்தார்.

அக்பரின் அறிக்கையைக் கேட்ட பொதுமக்கள் ஆச்சரியமமுற்றனர். “சக்கரவர்த்திக்கு என்ன இப்படி ஒரு வினோதமான ஆசை? இந்த சவாலை யார்தான் ஏற்பார்கள்?” என்று தங்களுக்குள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டார்கள். தலைநகருக்கு அருகேயிருந்த ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்த ஒரு பரம ஏழை இந்த செய்தியைக் கேட்டு பரபரப்படைந்தான்.

வாழ்க்கையில் பொற்காசுகளையே பார்த்திராத அவன் ஒரே சமயத்தில் நூறு பொற்காசுகள் கிடைக்கும் என்ற அறிக்கை அவன் ஆசையைத் தூண்டியது. அந்தத் தொகை மட்டும் கிடைத்தால், அவனுடைய ஏழைமை பரிபூரணமாக விலகிவிடும்.

அதைப்பற்றி அவன் தன் மனைவியிடம் விவாதித்த போது, அவள், “நமக்குப் பக்கத்து வீட்டில் சில நாள்களுக்கு முன் குடிவந்துஇருக்கும் வீரேந்திரனைக் கேட்டுப் பாருங்களேன்! அவன் அதிபுத்திசாலியாகக் காணப்படுகிறான். அவன் நிச்சயம் இதற்கு ஏதாவது ஒருவழி கூறுவான்என்றாள்.

அவ்வாறே அவன் தன்னுடையப் பக்கத்து வீட்டுக்காரனான வீரேந்திரனை யோசனை கேட்டவுடன் அவன் உடனே, “அது ஒன்றும் கஷ்டம்இல்லையே! நீ ஒரு நாற்காலியை அல்லது சோபாவைத் தலைக்கு மேல் சுமந்து போ! உன் மேல் வெயில்படாது!” என்று வீரேந்திரன் கூறினான்.

ஆகா! என்ன அருமையான யோசனை? இது ஏன் யாருக்குமே தோன்றவில்லை!” என்று மகிழ்ச்சியுடன் கூவிய அந்த ஏழை, “நான் நீ கூறியவாறு நாளைக்கே தலைநகர் ஆக்ராவிற்குச் செல்லப் போகிறேன்என்றான். அவ்வாறே மறுநாள் கிளம்பிய அவன் தலைக்குமேல் ஒரு சிறிய சோபாவைத் தூக்கிக் கொண்டு கால்நடையாகவே அக்பரின் தர்பாரை அடைந்தான்.

பிரபு! குடை இல்லாமலே கொளுத்தும் வெயிலில் என் கிராமத்தில் இருந்து இங்கு கால்நடையாக வந்துதிருக்கிறேன்!” என்று பரபரப்புடன் அறிவித்தான். “சபாஷ்! யாருக்குமே தோன்றாத இந்த யோசனை உனக்கு மட்டும் எப்படித் தோன்றியது?” என்று அக்பர் ஆவலுடன் கேட்டார்.

பிரபு! உண்மையில் எனக்கு இந்த யோசனையை சொல்லிக் கொடுத்தது என் பக்கத்து வீட்டுக்கார வீரேந்திரன்!” என்றான் ஏழை! அது பீர்பல் தான் என்றும் யூகித்துக் கொண்ட அக்பர் தன் திட்டம் பலித்ததையெண்ணி மிக மகிழ்ச்சியுற்றார். நான் அறிவித்தபடியே உனக்கு நூறு பொற்காசுகள் தருகிறேன். அந்தப் பணத்தை உன் கிராமத்திற்கு பத்திரமாக எடுத்துச் செல்ல உன்னுடன் இரு காவலர்களையும் அனுப்புகிறேன்.

நீ உன் வீட்டை அடைந்ததும், அந்த புத்திசாலி வீரேந்திரனை காவலர்களிடம் ஒப்படைத்து விடு!” என்றார். அவ்வாறே மிக்க மகிழ்ச்சியுடன் அந்த ஏழை இருவீரர்களின் துணையுடன் தன் வீட்டை அடைந்தான். அவன் அடையாளம் காட்டிய வீரேந்திரனைக் காவலர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆக்ரா திரும்பினர்.

தர்பாரில் நுழைந்த வீரேந்திரன் தன் முகத்தை ஒரு பையினால் மூடிக் கொண்டு வந்தான். “வீரேந்திரா! உன் முகத்தை ஏன் மூடிக் கொண்டிருக்கிறாய்? பையை அகற்று!” என்றார் அக்பர். “பிரபு! நான் வீரேந்திரன் இல்லை! நான்தான் பீர்பல்! உங்கள் முகத்தில் இனி நான் விழிக்கக் கூடாது என்ற உங்கள் கட்டளைப்படியே நான் எனது முகத்தை மூடிக்கொண்டு வந்து உள்ளேன்!” என்றான்.

பீர்பல்! உன் முகத்தை நான் இப்போதே பார்க்க விரும்புகிறேன்! இதுவும் என் கட்டளையே!” என்று கூறிய அக்பர் தானே முன்சென்று பையை அகற்றி விட்டு, பீர்பலை மிகுந்தப் பிரியத்துடன் கட்டித் தழுவிக் கொண்டார்.